உள்ளூர் செய்திகள்

இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு முதன்முதலாக தமிழில் பாடப்புத்தகம்

Published On 2022-10-29 09:42 GMT   |   Update On 2022-10-29 09:42 GMT
  • அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வசதியாக எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகம் தமிழில் தயாரிக்கப்படுகிறது.
  • எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 13 முக்கிய பாடப் புத்தகங்கள் உள்ளன.

சென்னை:

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2-வது கட்டம் அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு மொத்தம் 5½ ஆண்டுகள் படிக்க வேண்டும். அதில் 4½ ஆண்டுகள் பாடப்புத்தகங்களுடன் பயிற்சியும், ஒரு ஆண்டு முழுமையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வசதியாக எம்.பி.பி.எஸ். பாடப்புத்தகம் தமிழில் தயாரிக்கப்படுகிறது. 4 பாடப்புத்தங்கள் மொழி பெயர்க்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்கு முன் வழங்கப்பட உள்ளது.

தமிழ்வழி மாணவர்களுக்கு சிறந்த கருத்தியல் தெளிவு மற்றும் புரிதலை வழங்க தமிழ்நாடு பாட நூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம் ஆகியவை இணைந்து மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக மாணவர்களுக்கான கிரேஸ் அனாடமி கைட்டன் மற்றும் ஹால் டெக்ஸ்ட் புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அண்ட் லவ்ஸ் ஹார்ட் பிராக்டிஸ் ஆல் சர்ஜரி (தொகுதி1) மற்றும் முதலியார் மற்றும் மேனனின் மருத்துவ மகப்பேறியியல் ஆகிய 4 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் கடந்த ஒருவருடமாக 30 பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆங்கில பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய மருத்துவர் கூறியதாவது:-

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 13 முக்கிய பாடப் புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் படிப்படியாக மொழி பெயர்க்க திட்டமிட்டு உள்ளோம். மொழி பெயர்க்கப்பட்ட பாடப் புத்தகங்கள் மருத்துவ மாணவர்களுக்கு கருத்தியல் தெளிவை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News