நாட்டு இன மீன் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை- கலெக்டர் தகவல்
- 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் கரந்தையில் உள்ள நீா்வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உள்நாட்டு மீன் வளா்ப்பில் மாநிலத்திலேயே முதன்மையான மாவட்டமாக தஞ்சாவூா் மாவட்டம் திகழ்கிறது.
உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்போருக்குக் குறைந்த விலையில் அரசு நிா்ணயிக்கும் விலையில் மீன் குஞ்சுகள் விநியோகம் செய்வதற்காகவும் கரந்தை, நெய்தலூா், அகரப்பேட்டை, திருமங்கலக்கோட்டை ஆகிய 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், கரந்தையில் அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது.
குறைந்து வரும் நாட்டு இன மீன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தமிழக அரசால் கல்பாசு (கருஞ்சேல் கெண்டை) ரூ.2.50 லட்சமும், இந்திய பெருங்கெண்டை ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் உற்பத்தி செய்து, இம்மாவட்டத்திலுள்ள ஆறுகளில் இருப்பு செய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு மீன்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மீன்வள உதவி இயக்குநா் சிவக்குமாா், மீன்வள ஆய்வாளா் ஆனந்தன், கண்காணிப்பாளா் மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.