உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் சாமிநாதன் பேட்டி

Published On 2023-05-20 08:56 GMT   |   Update On 2023-05-20 08:56 GMT
  • நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.
  • விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்உழவர்துறை சார்பில், தென்னை பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, உர மேலாண்மை ஆகியவை தொடர்பான கருத்தரங்கு, பொள்ளாச்சி மூலனூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தென்னை நோய் வாடலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். கையேடுகளும் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்தரங்கில் பேசியதாவது:-

நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் வேளாண் சார்ந்த தகவல்களுக்கு கியூ ஆர் கோடு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.இதன் வாயிலாக விவசாயிகள் எளிதில் விவசாயம் சார்ந்த தகவல்களை பெறலாம்.

மேலும் விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏற்படும் தென்னை நோய் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து தென்னை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளனர்.

"கொங்கு மண்டலத்தில் கூலித்தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போதிய கொள்முதல் விலையும் கிடைக்கவில்லை. எனவே குறுகியகால சாகுபடியில் விலை கட்டுப்படி ஆகாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

தென்னை சாகுபடியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தென்னையில் ஏற்படும் பூச்சித்தாக்குதல் மற்றும் வாடல் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News