உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகை நாட்களில் இறைச்சி விற்பனை அமோகமாக இருக்காது- வியாபாரிகள் கவலை

Published On 2023-01-11 12:11 GMT   |   Update On 2023-01-11 12:11 GMT
  • திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என அரசாணை உள்ளது.
  • 16-ந்தேதி மாநகராட்சி இறைச்சி கடைகளை மூடாமல் இருந்தால் ஆடு, மாடு இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும்.

சென்னை:

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய வழக்கமான இறைச்சி வியாபாரம் பாதிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள். பொங்கல் பண்டிகை நாளில் பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள்.

மறுநாள் திங்கட்கிழமை மாட்டுப்பொங்கல் அன்று தான் அசைவ உணவு சாப்பிடுவது வழக்கம்.

ஆனால் மாட்டுப் பொங்கல் அன்று தான் திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என அரசாணை உள்ளது.

அதனால் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மாட்டுப்பொங்கல் நாளில் ஆடு, மாடு, கோழி இறைச்சி கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டு இருக்கும். ஆடுகள் வெட்டக்கூடிய இடங்கள் மூடப்படும்.

17-ந்தேதி காணும்பொங்கல் தினத்தில் இறைச்சி கடைகள் முழுமையாக செயல்படும் விற்பனையும் அதிகமாக இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் காணும் பொங்கல் அன்று கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு சென்று விடுவார்கள்.

இதனால் பொதுவாக பொங்கல் பண்டிகை நாட்களில் இறைச்சி விற்பனை அமோகமாக இருக்காது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் 15, 16, 17 ஆகிய நாட்களை கணக்கில் கொண்டு ஆடு, மாடு, கறிக் கோழிகள் சென்னையில் குவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் கூறியதாவது:-

பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வழக்கமாக நடைபெறும் இறைச்சி வியாபாரம் பாதிக்கப்படும். திங்கட்கிழமை ஆட்டு தொட்டிகள் மூடப்படும். ஆடுகள் எதுவும் தொட்டியில் வெட்டக்கூடாது என உத்தரவு இருப்பதால் அன்று விற்பனை செய்ய முடியாது.

மாட்டு பொங்கல் தினமான அன்று தான் இறைச்சி சாப்பிடுவார்கள். ஆனால் அன்று இறைச்சி கடைகளை மூட வேண்டிய நிலை உள்ளது. காணும் பொங்கல் தினத்தை நம்பிதான் வியாபாரம் மேற்கொள்ளப்படும்.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் 25 ஆயிரம் ஆடுகள் வெட்டப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சைதாப்பேட்டையில் ஆட்டு தொட்டியில் 3000, வில்லிவாக்கம் தொட்டியில் 500 ஆடுகள் வெட்டப் படலாம். பொங்கலுக்காக விலை உயர்த்தப்படவில்லை.

ஆட்டு தொட்டியில் வெட்டப்படும் ஆடுகள் தரம் வாரியாக கிலோ ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மாநகராட்சி இறைச்சி கடைகளை மூடாமல் இருந்தால் ஆடு, மாடு இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் 16-ந்தேதி கடையை மூட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ஞானசெல்வம் கூறியதாவது:-

சென்னைக்கு தினமும் கறிக்கோழி 1 கோடி கிலோ வருகிறது. அதாவது 1000 டன் கறிக்கோழிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. 200 முதல் 250 சிறிய லாரிகள் வருவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு 1500 டன் கறிக்கோழி சென்னைக்கு வரும். 3 நாட்களிலும் சராசரியாக 50 சதவீதம் விற்பனைதான் நடைபெறும்.

மாட்டு பொங்கல் அன்று தான் கறி சமைப்பார்கள். ஆனால் அன்று இறைச்சி கடைகளை மூட வேண்டும் என உத்தரவு உள்ளது. அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News