நெல்லை, தூத்துக்குடியில் இன்று 3,061 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
- தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
- மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இன்று 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் என 917 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் 140 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 777 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல், 2-ம் தவனை தடுப்பூசிகள் போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் ஏராளமானோர் வந்து ஊசிபோட்டு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 2009 நிலையான தடுப்பூசி முகாம்கள், 135 தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 2,144 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் தடுப்பூசி போட்டு சென்றனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகர பகுதியில் சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், வங்கிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதியத்திற்கு பின்பு வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்று மாநகர பகுதியில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.