- அங்கு அமைத்துள்ள மின்வேலியில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட மலையை ஒட்டிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
அவ்வப்போது வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தங்களது வயல் வெளிகளில் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் நிலத்திற்கு அருகே உள்ள மினகம்பத்தில் இருந்து திருட்டுதனமாக மின்சாரத்தை எடுத்து கம்பி வேலிகளில் இணைத்து விடுகின்றனர்.
அதனால் வனவிலங்குள் மற்றும் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி 3 காட்டுயானைகளும், கம்பைநல்லூர் அருகே தாழ்வாக இருந்த மின்கம்பி மீது உரசி 1 யானையும் உயிரிழந்தது. மேலும் இந்த மின்வேலியில் சிக்கி மனிதர்களும் பலியாகி யுள்ளனர்.
இந்த நிலையில் பாலக்கோடு அடுத்துள்ள சூடானூர் பகுதியை சேர்ந்த வர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் அப்பகுதியில் மலையை யொட்டி உள்ளது.
அந்த நிலத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். அடிக்கடி காட்டுபன்றிகள் விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் நெல்பயிரை பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்று இரவு வயலுக்கு சென்று காட்டுபன்றிகள் எதுவும் விளைநிலத்தை சேதப்படுத்தியுள்ளதாக என பார்த்துள்ளார்.
அப்போது அங்கு அமைத்துள்ள மின்வேலி யில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனால் வெகுநேர மாகியும் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் விளைநிலத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது மின்வேலியில் சிக்கிய நவீன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.