உள்ளூர் செய்திகள்

சத்துணவில் மாணவர்களுக்கு பால் - உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-12-24 10:03 GMT   |   Update On 2022-12-24 10:03 GMT
  • சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
  • சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பெருமாள், துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் முகமதுஅலி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீவன விலை உயர்வு, பால் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2017&ம் ஆண்டு ஆவின் நிர்வாகம், ஆரம்ப சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும் போதே, பாலில் உள்ள சத்து, கொழுப்பு கணக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் 5 ஆண்டுகள் கடந்து நடைமுறைப் படுத்தப்படவில்லை.

கால்நடை தீவனங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் லாபகரமாக செயல்பட்ட ஆவின் மூலம் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். நாள்தோறும் 1 கோடி லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும்.

சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News