கனிமவளங்கள் கடத்தல்: லாரிகளை முறையாக சோதனை செய்யாத போலீசாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
- மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இதில் பல டாரஸ் லாரிகள் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இதனால் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
குறிப்பாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், சாலைகள் சேதமடைந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதாக களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அதிக பாரத்துடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும் அவரது எச்சரிக்கையை மீறி, டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்வதாகவும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது எதிரே, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் சென்றதை பார்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோழிவிளை சோதனை சாவடியில் காரை நிறுத்திய அவர், அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், அதிக பாரத்துடன் லாரிகள் செல்கின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? எத்தனை லாரிகள் சென்றன என்பதை பதிவு செய்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். சோதனை சாவடியில் இருந்த போலீசார் விழிப்புடன் பணி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்த அவர், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத்தை, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதிக பாரத்துடன் சென்ற லாரிகளை உடனே பறிமுதல் செய்யுமாறு அப்போது கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடியாக தனிப்படை அமைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திய லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர். 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடி நடவடிக்கையால் நள்ளிரவிலும் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.