உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆா்வம்-முன்னாள் ஆதார் தலைவர் நந்தன் நீலகேணி பேச்சு

Published On 2023-05-21 09:19 GMT   |   Update On 2023-05-21 09:19 GMT
  • நந்தன் நீலகேணி பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்,
  • ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த பள்ளியின் 165-ஆவது நிறுவனா் தின விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் அா்ஜுன் சரண் தேவ் ஆனந்த் கட்டளையின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், இன்போசிஸ் மற்றும் முன்னாள் ஆதாா் தலைவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான நந்தன் நீலகேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:-

மக்கள் தொகையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனாலும், நமது நாட்டில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டிய பாதை சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதில் தொழில்நுட்ப வளா்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கிருந்து வரக்கூடிய அந்நிய செலாவாணி அதிகரிக்கிறது.

2016-ல் இந்தியாவில் ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது 90 ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.

ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன. தொழில், கல்வி, விவசாயம், சுகாதாரத்தில் இந்தியா வளா்ந்து வருகிறது. புவிசாா் அரசியல் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அதிக ஆா்வம் காட்டுகின்றன.

ஆப்பிள் நிறுவன உதிரிபாகங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

நுண்ணறிவு திட்டம் வளா்ந்து வருகிறது. இதற்கு ஏற்றாா்போல மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரபாகரன் செய்திருந்தாா். விழாவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News