நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தலில் மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.
சக்தி விநாயகர்
இன்று காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி யையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்க ளிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், கணேசபுரம் விநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பேட்டை விநாயகர், பாண்ட மங்கலம் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி, காந்திபுரம் முதல் தெருவில் உள்ள விநாயகர் கோவில், காவிரி ஆறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அக்ரஹாரம் விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ராசிபுரம்
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன் பொறி, லட்டு, கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதேபோல் பட்டணம் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடத்தப்பட்து. கடைவீதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில், சிவானந்தசாலை சக்தி விநாயகர் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் புத்தாடைகள் அணிந்து, பொறி, கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து விநாயகரை வழிபட்டனர்.
வயர்லெஸ் கேமரா அமைப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 938 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். 8 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலை உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
மோகனூர், பரமத்தி வேலூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 730 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி பெற்றுள்ளனர்.
பதட்டமான பகுதிகள்
குறிப்பாக பதட்டமான பகுதிகளாக கருதப்படும் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா அதிகப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை வைத்துள்ள வர்களே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விழா கொண்டாட அறிவுறுத்தப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.