உள்ளூர் செய்திகள்

பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி அபூர்வா. 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா பேட்டி

Published On 2022-10-27 09:38 GMT   |   Update On 2022-10-27 09:38 GMT
  • நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

2-வது நாளாக ஆய்வு

இந்நிலையில் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சி பகுதி அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக 22 பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மேலப்பாளையம் மண்டல அலுவலக உணவு கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. இதனை இன்று கண்காணிப்பு அதிகாரி அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கண்காணிப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தபால்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை ஆய்வு செய்த கண்காணிப்பு அதிகாரி அதனை சாப்பிட்டு பார்த்து தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவது தெரியவந்தது. மேலும் மாணவர்களுக்கு காலையில் சரியான நேரத்திலும் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் ஏற்படும் சேதங்களை விட தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால்தான் அதிக சேதாரங்கள் ஏற்படும். இதனால் தாமிரபரணி கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் வெள்ளம் பாதிக்காத அளவு தற்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதால் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க கால்வாய்களில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News