கொடைக்கானலில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் பெய்து வரும் மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா நகரான கொைடக்கானலில் வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மற்ற நாட்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர்.
இன்று காலை முதல் கொடைக்கானல் நகர் மற்றும் மலைகிராமங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. மேலும் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதனை ரசிக்க மக்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.