உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர்கள் கைது- கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் 18 பேர் போலீசில் பிடிபட்டனர்

Published On 2022-06-29 07:14 GMT   |   Update On 2022-06-29 07:14 GMT
  • திருவல்லிக்கேணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகமான முறையில் வந்த ஆட்டோவை பிடித்து சோதனை செய்தனர்.
  • ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை:

கடலோர பாதுகாப்பு படை மற்றும் சென்னை காவல் துறையினர் இணைந்து 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையை சென்னையில் நேற்று காலை தொடங்கினர். 2 நாட்கள் தொடர்ந்து ஒத்திகை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர்மட்ட பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டது. நேற்று மாலை வரையில் 6 பேரை போலீஸ் குழுவினர் மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சென்னையில் ஊடுருவ முயன்ற 12 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரையில் மொத்தம் 18 பேர் பிடிபட்டுள்ளனர்.

இதற்கிடையே திருவல்லிக்கேணி போலீசார் அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகமான முறையில் வந்த ஆட்டோவை பிடித்து சோதனை செய்தனர்.

அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் சோரோ தாலுக்கா ராமகிருஷ்ணன் (29), ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கா மண்டல்(20), ஜக் மோகன் மண்டல்(28), அர்ஜூன் மண்டல் (20) என தெரிய வந்தது.

இவர்கள் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து அங்கிருந்து இறங்கி ஆட்டோவின் மூலம் கஞ்சா கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News