உள்ளூர் செய்திகள்

புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் பாளை வ.உ.சி. மைதானம்- மேற்கூரையுடன் கேலரிகள், சி.சி.டி.வி. காமிராக்கள் அமைப்பு

Published On 2022-08-21 09:24 GMT   |   Update On 2022-08-21 09:24 GMT
  • நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
  • பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பேருந்துநிலையம், பாளை பஸ் நிலையம், நவீன பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட சில பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் புதிதாக கட்டும் பணி, டவுன், பாளை மார்க்கெட்டுகள் புதுப்பிக்கும் பணி, பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்காக ஏற்கனவே அங்கு இருந்த கேலரிகள், பார்வையாளர்கள் கூடம், விளையாட்டு வீரர்கள் அறைகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து வ.உ.சி. ைமதானத்தில் நவீன இருக்கைகள் மற்றும் மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேலரிகளில் அதிகபட்சமாக 1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். ேமலும் 24 வி.ஐ.பி.க்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 320 சதுர அடியில் பிரமாண்ட மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவிலும் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையிலும் 6 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளனர். மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு சிறப்பு நுழைவுப்பாதை, முக்கிய நபர்கள் வருவதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தும் வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாளை வ.உ.சி. மைதானம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

பணிகள் முடிந்துள்ள வ.உசி. மைதானத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Tags:    

Similar News