கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு ஒரு லட்சம் மனுக்களை அனுப்ப பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு
- பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
- இறுதியாக பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் :
நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை பாடங்களை கற்றுக்கொடுக்க, 2012 ல் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் செந்தில்குமார் கூறியதாவது:- தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, கட்சியின் தேர்தல் அறிக்கை குழு, பள்ளிக் கல்வி, நிதி, இளைஞர் நலத்தறை அமைச்சர்கள், தலைமை செயலர், முதல்வரின் செயலர், பள்ளிக் கல்வி செயலர், பள்ளிக் கல்வி ஆணையர், மாநில திட்ட இயக்குநர் உள்ளிட்டோருக்கு ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப உள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில் 388 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். எதிர்கட்சியாக இருந்த போது இதே கோரிக்கையை தி.மு.க., சட்டசபையில் வலியுறுத்தியது. தற்போது, கூட்டணி கட்சிகள் அனைத்தும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. முதல்வரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருகிறோம். பதில் இல்லை.
பகுதி நேர ஆசிரியர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட, பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு லட்சம் மனுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். இறுதியாக பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு செந்தில் குமார் கூறினார்.