பொன்னேரி 2 கிராம மக்கள் பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.