உள்ளூர் செய்திகள்

மணப்பாடு கடற்கரையில் இன்று மீன்கள் வாங்க வந்த கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

மணப்பாடு கடற்கரையில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

Published On 2022-06-30 09:13 GMT   |   Update On 2022-06-30 09:13 GMT
  • மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
  • கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களே வசிக்கும் கிராமம் ஆகும். இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.

இவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மற்ற நாட்களில் அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருவதும், ஒரு நாள் முன்னதாக மாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மறு நாள் காலையில் வெளியே வருவதும், ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவது என மூன்று பிரிவாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நாட்டுப் படகு கட்டுமரம் பயன்படுத்தி தான் அதிகமான மீன்களை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர்.

உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மணப்பாடு கடற்கரைக்கு வந்துமீன்களை வாங்கி செல்கின்றனர்.

கடலில் மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்தவுடன் கடற்கரையில் வைத்து ஏலம் போடுவார்கள்.ஏலம் போட்ட பின்புதான் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் போடுவார்கள். மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

இதுபற்றி கடற்கரைக்கு மீன் வாங்க வந்த ஒருவர் கூறியதாவது:-

அசைவ உணவுகளில் மிகவும் சத்தானதுமீன்கள் மட்டும் தான். வீதி வீதியாக விற்பனைக்கு வரும் மீன்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டு பதப்படுத்தி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இங்கு வந்து வாங்கினால் கடலில் பிடித்து வரும் மீன்கள் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.

மேலும் மணப்பாடு மீன்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுவையுண்டு, வாசனை உண்டு, அதனால் தான் நான் நாசரேத்திலிருந்து மீன்கள் வாங்குவதற்கு இங்கு வந்துள்ளேன். நான் எனது நண்பர்கள் என பலர் சேர்ந்து மீன்களை மொத்தமாக வாங்கி பிரித்து எடுத்து கொள்வோம் என்று கூறினார்.

இதேபோல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர். 

Tags:    

Similar News