சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தகவல்
- விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
- இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்ய வருகிற 22-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு ள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் சம்பா பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி வரும் 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.