பெரம்பலூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு -
- பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார்.
- உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,
அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருள்கள் பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, தாட்கோ மேலாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.