உள்ளூர் செய்திகள்

ஆவடியில் ரூ.1½ லட்சம் வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

Published On 2023-01-05 07:26 GMT   |   Update On 2023-01-05 07:26 GMT
  • சந்தேகத்தின் பேரில் போலீசார் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடகமாடியது தெரிந்தது.
  • வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர்.

திருநின்றவூர்:

ஆவடி, பூந்தமல்லி சாலையில் கேஸ் பங்க் உள்ளது. இங்கு புதுப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதியில் உள்ள வங்கி அருகே சென்றபோது மர்மநபர்கள் தன்னை தாக்கி பணத்தை கொள்ளை யடித்து சென்றுவிட்டதாக கார்த்திக் தெரிவித்தார். அவருக்கு காயமும் ஏற்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் ஆவடி போலீசில் புகார் அளித்தார். உதவி ஆணையர் புருசோத்தமன், ஆவடி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் கார்த்திக்கிடம் விசாரித்த போது அவர் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி நாடக மாடியது தெரிந்தது. கார்த்திக் தனது நண்பர்களான தங்கமுத்து, ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து இந்த வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கார்த்திக் பெட்ரோல் பங்க் வசூல் பணம் ரூ.60 ஆயிரம் வரை கையாடல் செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தார். பின்னர் அவரால் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிக்கு பணம் கொண்டு செல்லும்போது வழிப்பறி நாடகமாடி அந்த பணத்தை வைத்து விடலாம் என்று நினைத்து அவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். வழிப்பறி நாடகத்தின்போது போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை உண்மையிலேயே செங்கலால் தலையில் தாக்கி இருந்தனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். எனினும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் நண்பர்களுடன் சிக்கிக்கொண்டார்.

Tags:    

Similar News