உள்ளூர் செய்திகள்

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2024-06-02 04:44 GMT   |   Update On 2024-06-02 04:44 GMT
  • 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
  • 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் நாளை மறுநாள் (4-ந் தேதி) எண்ணப்பட உள்ளன.

இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வைக்கப் பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை 1,384 பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாத்து வருகின்றனர். மேலும், வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் வடசென்னையில் 357 பேர், தென் சென்னை யில் 374 பேர், மத்திய சென்னை யில் 380 பேர், 322 அலு வலக உதவியாளர்கள் என மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக் காக 3 பாராளுமன்றத் தொகுதிகளிலும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேசைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வட சென்னை பாராளுமன்ற தொகுதி உள்ளிட்ட 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதா? என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டு அறிந்தார். தேர்தல் ஆணைய விதிகளின் படி முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்றும், எந்த கட்சியும், வேட்பாளரும் ஆட்சேபிக்காத வகையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையே தபால் வாக்குகள் இறுதியாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆா.எஸ்.பாரதி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கடந்த 31-ந் தேதி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் பணி தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை தேர்தல் நடததும் அதிகாரியால் பெறப்பட்ட அனைத்து தபால் வாக்குகளும் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News