மிரட்டி வரும் கனமழையால் பகலில் கடைவீதியில் படையெடுக்கும் பொதுமக்கள்
- இன்றுமுதல் மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பலகாரங்கள் செய்ய தேவையான பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகைக்கு முதல் ஒரு வாரத்தில் இருந்து இதுபோல பொருட்கள் வாங்க மக்கள் வந்துவிடுவார்கள்.
கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் தொடங்கி இரவு வரை மழை பெய்து வருவதால் தீபாவளி விற்பனை பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடையே இன்றுமுதல் மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே பொருட்களை வாங்க கடைவீதியில் குவிந்து வருகின்றனர்.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன. நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தாலும் மக்களின் பணம் மற்றும் உடமைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் அதிகளவில் தங்கள் கைவரிசையை காட்டுவதற்கு உலவி வருகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் படங்களை முக்கிய சந்திப்பில் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆனால் அதுபோன்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.சி.சி.டி.வி காமிராக்கள் வைத்தும் போலீசார் கண்காணிப்பு நடத்தப்படும். ஆனால் அதுபோன்று எந்த பணியும் செய்யப்படாததால் விரைவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் ெதாடர்ந்து அதிகரித்து வருவதால் மாலை நேரங்களில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.