கடலூரில் வீடுகளை இடிக்க அதிகாரிகளுக்கு எதிர்ப்பு பொது மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
- நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளது.
- ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே குளம் பகுதியில் 8 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு உள்ளதால் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி சார்பில் பொறியாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு இருந்தனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளை இடிக்க தயாரானார்கள். உடனே அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஜேசிபி எந்திரம் முன்பு படுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாக இருந்தாலும் கூட இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இடமாகும். மேலும் இந்த இடத்திற்கும் மாநகராட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மேலும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்போது நாங்கள் உரிய பதில் அளிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தற்சமயம் வீடுகள் இடிக்க மாட்டோம். வீட்டிற்கு வெளியில் உள்ள கழிப்பறைகளை இடிக்கவுள்ளோம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த நபர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் வெளியில் இருந்த கழிப்பறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியினை தொடங்கினார்கள் இந்த நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.