உள்ளூர் செய்திகள்

போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

Published On 2022-07-17 09:06 GMT   |   Update On 2022-07-17 09:06 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
  • வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள

இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி

றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.

மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.

தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News