எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவை வழங்கிட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்
- பயிற்றுநர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள்
- எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவை வழங்கிட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
விராலிமலை :பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை கீரனூர் மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் செயல்படுத்துவதற்கான மைய கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி கீரனூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு முதியோர்களுக்கான எழுத்தறிவையும் எண்ணறிவையும் வழங்கிட கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-2022 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 கற்றல் மையங்களில் 7949 கற்போர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் வழங்கி மாநில எழுத்தறிவு விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்திடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 என்ற புதிய திட்டம் 5 ஆண்டுகள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 13,680 கற்போர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரியதவர்களுக்கு கையெழுத்து போடவும், மனு எழுதவும், கடிதம் எழுதவும், நாளிதழ்கள் படிக்கவும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதே போல் தன்னார்வலர்களிடம் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மெஹராஜ் பானு, காந்திமதி, வட்டார வளமைய மேறபார்வையாளர் அனிதா, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சியின் கருத்தாளர்களாக சுரேஷ், அப்சரா பானு, மாரியம்மாள் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் மஞ்சு,சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.