உளுந்து கொள்முதல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- உளுந்து கொள்முதல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- குறைந்தபட்ச ஆதார விலையில்
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை, நவ.14- தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது உளுந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 170 மெ.டன் உளுந்து மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 160 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உளுந்து கொள்முதல் 29.12.2022 வரை நடைமுறையில் இருக்கும். எனவே இத்திட்டத்தில் உளுந்து விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் உளுந்து கொள்முதலுக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.