கருப்பர் கோவில் சாமி சிலைகள் உடைப்பு
- கருப்பர் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டது
- மர்ம நபர்கள் அட்டூழியத்தால் பரபரப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ளது சுணை கருப்பர் கோயில். அப்பகுதி கிராம மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் சுணை கருப்பர் கோயில் வரலாற்று புகழ் பெற்ற பழங்கால கோயிலாகும். இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு கோயிலின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், கருவறை உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மரத்திலான கதவின் ஸ்க்ருவை கழட்டிவிட்டு உள்ளே சென்றவர்கள் உள்ளிருந்த மூலவர் கருப்பர் சிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயில் சுற்றுப்புறத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த வேல், அருவாள், கம்பு உள்ளிட்ட பொருட்களை சிதறடித்து சென்றுள்ளனர்.
மர்ம நபர்களின் இந்த செயலால் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள், கோயில் முன் திரண்டனர். இதனை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்