பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 15 -ந் தேதி ஆகும். எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விபரங்களை சரிபார்ப்பதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.