அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் பேரணி
- அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது
- தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட கோரி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 300 முதல் 420 வரை தினக்கூலியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தற்காலிக தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் லேபர் சப்ளை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியார் நிறுவனம் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்போவதாகவும், தாங்கள் நிர்ணயிக்கின்ற அளவிற்கு வேலை செய்யவில்லையெனில் ஊதியம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
சோதனைச் சாவடியிலிருந்து தொடங்கிய பேரணியானது பெரியகடைவீதி, கட்டுமாவடி முக்கம், பேருந்து நிலையம் வழியாக அம்மா உணவகம் அருகே நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், சிஐடியு மாவட்டத் தலைவர் அலாவுதீன், செயலாளர் கர்ணா உள்ளிட்ட தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.