- எடப்பாடி ஆதரவாளர் திடீர் விலகினார்
- ஓ.பி.எஸ். அணியில் ஐக்கியம்
திருச்சி:
அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க ஆதரவாளர்களை இழுத்து வருகின்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளராக, மாவட்ட பேரவை செயலாளராக எடப்பாடி அணியில் அங்கம் வகித்து வந்த பத்மநாபன் நேற்று திடீரென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தை சந்தித்து ஓ.பி.எஸ்.அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பத்மநாபன் திடீரென அணி மாறியது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இவர் ஆரம்பத்தில் கட்சி பிளவு பட்ட போது வைத்திலிங்கம் ஆதரவாளராக இருந்தார். பின்னர் திடீரென எடப்பாடி அணிக்கு தாவினார். இப்போது மீண்டும் பழைய இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேற்று பத்மநாபன் சந்தித்து பேசினார். இந்த தாவல் திருச்சி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அவரை எடப்பாடி அணிக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.