புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
- புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
- செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.
இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.