உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தத்தால் மக்கள் அவதி

Published On 2022-08-07 09:09 GMT   |   Update On 2022-08-07 09:09 GMT
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 கிராமங்களில் இரவில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்
  • பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வல்லத்திராக்கோட்டை, காரையூர், பரம்பூர், புனல்குளம், மழையூர், வாராப்பூர் மற்றும் ராஜநாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை என்றும். பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

நாள் முழுவதும் இயக்கப்பட்டு வந்த இந்த ஆம்புலன்ஸ்கள் கடந்த சில மாதங்களில் இரவு நேரங்களில் இயக்கப்படுவது ஒவ்வொரு இடமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 7 இடங்களுமே கிராமப்பகுதிகளாக இருப்பதால் அப்பகுதியினரால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு உடனடியாக மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே நாள் முழுவதுமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் கூறியதாவது:

மனிதருக்கு எப்போது அவசர உதவி தேவைப்படும் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே பகலில் ஆம்புலன்ஸை இயக்கி விட்டு இரவில் இயக்காமல் இருப்பது நல்லத்தல்ல. பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை.

எனவே பொதுமக்களின் அசரத்தேவைக்காக கொண்டு வரப்பட்ட மிகவும் பயனுள்ள இந்தி திட்டத்தில் இரவு, பகல் பாராமல் அனைத்து நேரங்களிலும் சேவையை தொடர செய்ய வேண்டும். இத்தகைய இடையூறுக்கு பராமரிப்புக்கான நிதிப் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என்றெல்லாம் அலுவலர்கள் காரணம் கூறுவதாக தெரிகிறது.

நிர்வாகத்தின் இத்தகைய செயலைப் பார்க்கும் போது இந்த திட்டத்தையே முடக்கி விடுவார்களோ என கருதத் தோன்றுகிறது. எனவே இதில் கலெக்டர் தலையிட்டு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆம்புலன்சில் பணிபுரியும் பெண் மருத்துப் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் உள்ளதால் 7 வாகனங்களை முழுநேரமும் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் குறைந்த தொலைவிலேயே அடுத்த ஆம்புலன்ஸ் சேவை வசதியுள்ள பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக இரவில் ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News