உள்ளூர் செய்திகள்

கனமழை காரணமாக பவானியில் மழை வெள்ளம்: பொதுமக்கள் அவதி

Published On 2024-11-15 05:19 GMT   |   Update On 2024-11-15 05:19 GMT
  • 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
  • அதிகபட்சமாக பவானியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆனால் நேற்று காலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது.

ஈரோடு மாநகர பகுதியில் காலை முதல் சாரல் மழை தூறி கொண்டே இருந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் லேசான தூறல் மழை விட்டு விட்டு பெய்தது. மதியம் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

காலிங்கராயன் பாளையம், குருப்ப நாயக்கன்பாளையம், ஊராட்சி கோட்டை உள்பட பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பவானி புது பஸ் நிலையம் பெட்ரோல் பங்க் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதைத் தொடர்ந்து இரவிலும் பலத்த மழை பெய்தது. ரானா நகர், செங்காடு பகுதிகளில் மழை நீர் சாக்கடையை மூழ்கடித்து மேட்டூர் சாலையை கடந்து மறுமுனையில் தேங்கி நின்றது. பவானி காமராஜ் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மழை நின்றதும் ஒரு மணி நேரத்தில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிய தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேப்போல் அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளான நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

வெள்ளித்திருப்பூர், மாத்தூர், எண்ணமங்கலம், சங்கராபாளையம், வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை பெய்தது.

புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை முதல் பலத்த மழை பெய்தது. புஞ்சை புளியம்பட்டி-மாதாம்பாளையம் சாலை, வாரச்சந்தை, தங்கச்சாலை வீதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திரு.வி.க. கார்னர் மற்றும் வாரச்சந்தை முன் சாக்கடை தூர்வாரப்படாததால் கழிவுநீருடன் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்து றை, குண்டேரிப்பள்ளம், தாளவாடி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி-27.80, மொடக்குறிச்சி-12.40, சென்னிமலை-10, பெருந்துறை-8, ஈரோடு-4.20, குண்டேரிப் பள்ளம்-3.20, தாளவாடி-2.80, அம்மாபேட்டை-1.20.

Tags:    

Similar News