உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் 62 மி.மீ மழை கொட்டியது- வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு

Published On 2024-07-13 07:54 GMT   |   Update On 2024-07-13 07:54 GMT
  • கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 3 மணிக்கு பிறகு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து தொடங்கியது.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மதியம் 3.45 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. உடனடியாக நகராட்சி பொறியாளர் சிவகுமார் அடங்கிய குழுவினர் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் வற்றியது.

மழைக்காலத்தில் குடியிருப்புகள் தண்ணீர் புகாத வகையில் ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேப்போல் கொடிவேரிப்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், குண்டேரிப்பள்ளம் அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதேப்போல் அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதியில் சாரல் மழை பெய்தது.

ஈரோடு மாநகர பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கோபிசெட்டிபாளையம்-62.20, எலந்த குட்டைமேடு-23.60, கொடிவேரிஅணை-11, அம்மாபேட்டை-9.40, வரட்டுப்பள்ளம்-8.40, கவுந்தப்பாடி-6.40, சென்னிமலை-4, பெருந்துறை-3, குண்டேரிப்பள்ளம் -2.20, பவானிசாகர்-1.80, ஈரோடு-1.20.

Tags:    

Similar News