உள்ளூர் செய்திகள்

கோவையில் அரசு பஸ்சுக்குள் வடிந்த மழைநீர்

Published On 2023-04-30 09:26 GMT   |   Update On 2023-04-30 09:26 GMT
  • இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே சென்றனர்.
  • இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலாம்பூர்,

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை கோவை புறநகர் பகுதிகளான அன்னூர், பொகலூர், தாளத்துறை, தேரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது.

இந்த மழையின் போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்சுக்குள் மழைநீர் வடிந்து உள்ளே விழுந்து கொண்டிருந்தது.

இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருந்த போதிலும் பஸ் முழுவதும் மழைநீர் விழுந்து கொண்டே இருந்ததால் சில பயணிகளை பஸ்சை விட்டு இறங்கி மாற்று பஸ்சிலும் பயணிக்கும் நிலை உருவானது.

பஸ்சுக்குள் மழை நீர் வடிந்ததை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பழுதடைந்த பஸ்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகளிடம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News