உள்ளூர் செய்திகள்

மழைநீர் வடிகால்: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் தப்ப முடியாது

Published On 2024-07-28 06:28 GMT   |   Update On 2024-07-28 06:28 GMT
  • பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன.
  • மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

சென்னை:

மழைக்கால முன்னேற்பாடுகளை ஆண்டு தோறும் அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும் பருவ மழை காலம் சென்னை வாசிகளுக்கு போதாத காலமாகவே மாறி விடுகிறது.

எப்படியாவது சென்னையை மிதக்க வைத்து மக்களை தவிக்க வைத்து விடுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறதா? எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் வடிந்தோட வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில், மின் வாரியம், குடிநீர் வாரியம் என்று பல துறைகள் மேற்கொண்டு வரும் பணிகளால் இருக்கின்ற கால்வாய்களே அடைபட்டு கிடக்கின்றன. எனவே மழை வந்தால் தண்ணீர் எங்கே போகும் என்ற கேள்விதான் இப்போது சென்னை வாசிகளை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை சந்திப்பது சவாலாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன.

மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம் பாக்கம், வளசரவாக்கம், சோழிங்க நல்லூர், தேனாம்பேட்டை ஆகிய 7 மண்டலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டும், அடைப்புகள் ஏற்பட்டும் உள்ளன.

ஓட்டேரியில் நல்லா கால்வாயில் 250 மீட்டர் தூரத்துக்கு ஓடை துண்டிக்கப்பட்டுள்ளது. ரேடியல் ரோடும், ஓ.எம்.ஆர். ரோடும் இணையும் இடத்தில் மத்திய கைலாசில் இருந்து செல்லும் பாதையில் சுமார் 100 அடி தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரூ.5,800 கோடி செலவில் நடைபெறும் மேம்பால சாலை பணிகள் துறைமுகத்தில் இருந்து மதுர வாயல் வரை நடக்கிறது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த மேம்பால சாலை பணிக்காக கூவம் ஆற்றில் 605 ராட்சத தூண்கள் கட்டப்படுகிறது.

மழை நீர் ஆற்றுக்குள் செல்லும் பகுதிகள் பல இடங்களில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கூவம் ஆறு பல இடங்களில் இவ்வாறு மண் கொட்டப்பட்டு இருப்பதால் சுருங்கி கிடக்கிறது.

இது தவிர மின் வாரியம் சார்பில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள், குடிநீரர் வாரிய பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நீர்வழித்தடங்கள் அடைபட்டு கிடக்கின்றன.

மாதவரம் பால் பண்ணை சாலை, ஜவகர்லால் நேரு ரோடு, புரசைவாக்கம் நெடுஞ் சாலை, பர்ணபி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுக்கலாம்.

இந்த பழுதுகளை மாநக ராட்சி கண்டறிந்துள்ளது. அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து பருவ மழைக்கு முன்பு இந்த பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லா விட்டால் ஆபத்தை தவிர்க்க முடியாது.

Tags:    

Similar News