கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
- பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
பட்டீஸ்வரம்:
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா நேற்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கிரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மங்கள இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கிலும், மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற உள்ளது.
அதன்படி, 1-ம் நாள் இந்திர விமானம், 2-ம் நாள் சூர்யப்ரபை, 3-ம் நாள் சேஷ வாகனம், 4-ம் நாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6-ம் நாள் யானை வாகனத்திலும், 7-ம் நாள் கோரதம் மற்றும் புன்னைமர வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. 10-ம் நாள் சப்தாவர்ண விழாவும், ஏப்ரல்-1-ந்தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவடைகிறது.
மேலும், தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.