முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த முடிவு
- தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.
- தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது.
இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை கண்காணிக்கவும், தொண்டியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ரோட்டரி சங்கமும், ராமநாதபுரம் தனியார் நிறுவனமும் மற்ற தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்தது.
அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் முருகேசன், பட்டயத் தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா, முன்னாள் தலைவர்கள் மரிய அருள், சிவராமகிருஷ்ணன் ரஜினி, வீரகுமார் முன்னிலை வகித்தனர். தொண்டி நகர் பகுதியில் 16 இடங்களில் 60 காமிராக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அனைத்து காமிராக்களையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.