ரூ.2.87 லட்சத்திற்கு மிளகாய் வத்தல் விற்பனை
- ரூ.2.87 லட்சத்திற்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்யப்பட்டது.
- உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய் வத்தல் ஏலம் நடந்தது. ஏலத்தில் முதுகுளத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் 13 பேர் தாங்கள் கொண்டு வந்த 16.7 குவிண்டால் மிளகாய் வத்தலை ஏலத்திற்கு வைத்தனர். இதனை அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.19 ஆயிரத்து 200-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.16ஆயிரத்து 500-க்கும் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 598க்கு விற்றனர்.
இந்த ஏலம் குறித்து ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசுகையில், இனிவரும் காலங்களில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்க வரும் போது உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த வசதியை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி விளை பொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையலாம் என்றார்.
முதுகுளத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் நூர்ஷிபா, இ-நாம் திட்ட பணியாளர்கள் இந்த ஏலத்தின் போது உடனிருந்தனர்.