நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் - அதிகாரிகள் வாக்குவாதம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
- கூச்சல் குழப்பம் ஏற்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் ,துணைத்த லைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் திமுக உறுப்பினர் பிருந்தா, எனது வார்டு பகுதிக்கான பணிகளை கேட்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை, கூட்டத்திற்கு வருவதே பயனற்றது வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை நகரமன்ற தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து உறுப்பினர்கள் சுரேஷ், ரவிச்சந்திரன், சீனிவாசன், மோகன், செந்தில்குமார் ஆகியோர் தங்கள் வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆஞ்சநேயர் கோவில் குளம், பூண்டி மகான் ஆசிரம குளம் ஆகியவை குறித்து பேசினர்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு , அதிகாரிகள் தொடர்ந்து நகராட்சியில் நிதி நிலை சரியில்லை என கூறியதால், உறுப்பினர்கள் வரிவசூல் செய்வது அதிகாரிகளின் பணி அதை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகள் , உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.