உள்ளூர் செய்திகள் (District)

புதியதாக கட்டப்பட்டு வரும் ரவுண்டானா.

ஆற்காடு டவுன் சந்திப்பில் புதிய ரவுண்டானா

Published On 2023-11-01 07:25 GMT   |   Update On 2023-11-01 07:25 GMT
  • விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை
  • சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்

கலவை:

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை ஆற்காடு டவுன் சந்திப்பில் புதிய ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலைதுறையால் கட்டப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலையின் சந்திப்பு அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதால் புதிய ரவுண்டானா அவசியமாக உள்ளது

திட்டத்தின் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு டவுனுக்கு செல்லும் பிரதான பாதையின் மையத்தில் சுமார் 1,500 சதுர அடியில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.இதில் 1.5 மீட்டர் உயரத்திற்கு வேலி அமைக்கப்படும்.

சுற்றுபகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படும். மேலும் மிளிரும் விளக்குகள், பிரதிபலிப்பான்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படும்.நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை, குறிப்பாக சென்னையில் இருந்து, ஆற்காடு சந்திப்புக்கு அருகில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

போக்குவரத்து ஒழுங்குமுறை

சாலையோர மின் விளக்குகள் முதல் அனைத்து மின் இணைப்புகளும் சரிபார்க்கப்படும். உடைந்த கான்கிரீட் நடைபாதைகள் மீண்டும் அமைக்கப்படும்.

இதனால் சென்னையை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் முன்பு போல் ஆற்காடு நகருக்குள் நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, பாலாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக செல்ல முடியும்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஜனவரி மாதம் முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 96 பேர் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பகுதிகளில் இறந்துள்ளனர். 14 பேர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பெரும்பாலும் பைக்குகளில் செல்பவர்கள் மற்றும் சாலையோரமாக நடந்து செல்பவர்கள் அதிகமாக இறந்துள்ளனர்.

தற்போது ரவுண்டானா அமையும் ஆற்காடு சந்திப்பு, மாவட்ட போலீஸாரால், விபத்து அதிகம் ஏற்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் அமைய உள்ள புதிய ரவுண்டானா, டவுனில் இருந்து பைக் ஓட்டுபவர்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றனர்.

Tags:    

Similar News