தமிழ்நாடு (Tamil Nadu)

தனியார் பார்சல் நிறுவனத்தின் வேன் தீப்பிடித்து எரிந்தது

Published On 2024-10-13 11:15 GMT   |   Update On 2024-10-13 11:15 GMT
  • தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:

சேலத்தில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் இருந்து நேற்று நள்ளிரவு பார்சல் பொருட்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. அந்த வேனை ஓமலூரைச் சேர்ந்த டிரைவர் வீரமணி (வயது36) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த வேன் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டிநாய்க்கனபள்ளி அருகே வந்தபோது திடீரென்று வண்டியில் இருந்து புகை வெளியேறியது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உடனே டிரைவர் வீரமணிக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே டிரைவர் வீரமணி வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டு பார்த்தபோது வேனில் திடீரென்று தீப்பிடிக்க தொடங்கியது.

அப்போது அவர் அந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால், அவரால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் அந்த வண்டி முழுவதும் தீ பரவியது.

இதுகுறித்து வீரமணி கிருஷ்ணகிரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அந்த வழியாக சென்றவர்கள் டிரைவருக்கு உடனே தகவல் தெரிவித்தால், அவர் வண்டியை சாலையோரம் நிறுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக டிரைவர் வீரமணிக்கு எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினார். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பார்சல் பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தால், சில பார்சல் பொருட்கள் எரியாமல் மீட்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்தபோது, பார்சலில் யாரோ பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருட்கள் அனுப்பி வைத்தள்ளனர். அந்த பார்சலில் இருந்து தான் தீப்பிடிக்க தொடங்கி மற்ற பொருட்கள் மீது தீ பரவியது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News