உள்ளூர் செய்திகள்

உழவன் செயலியில் நெல் அறுவடை எந்திரங்கள் விவரம் பதிவேற்றம்

Published On 2023-02-26 09:22 GMT   |   Update On 2023-02-26 09:22 GMT
  • விவசாயிகள் பயனடைய அறிவுரை
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும், வேலை ஆட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண் இயந்திரமயமாக்கல் இன்றியமையாததாகிறது.

அறுவடை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலுள்ள நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் இயந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது.தமிழகத்தில் உள்ள விவசாயிகள் குறித்தக் காலத்தில் நெல் அறுவடை செய்ய ஏதுவாக தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்தி ரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், அலைபேசி எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 324 சக்கர வகை அறுவடை இயந்திரங்களும் 1 டிராக் வகை அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை தொகை நிர்ணயம் செய்து பயன் அடையலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News