உள்ளூர் செய்திகள்

மாப்பிள்ளை பிடிக்காமல் ஓடிய மணப்பெண் மீட்பு

Published On 2023-11-29 09:16 GMT   |   Update On 2023-11-29 09:16 GMT
  • அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்
  • இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பரபரப்பு

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண். இவர் ஸ்ரீபெரும்பதுாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த உறவினர் மகனான 30 வயது வாலிபருக்கும் பெரியோர்களால் பேசி திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

இருவருக்கும் இன்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று மருதாணி வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற இளம்பெண் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அங்குள்ள கடைக்கு சென்று தேடினர். கடைக்காரரோ இங்கு யாரும் வரவில்லை என்ற கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். மணப்பெண் கிடைக்காததால் நெமிலி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மணப் பெண்னை தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று, மாலை அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மணப்பெண் தஞ்சமடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை, அதனால் தான் நான் வீட்டை விட்டு சென்றுவிட்டேன் என கூறினார்.

மேலும் இந்த மாப்பிள்ளையை எனது தோழிகளுக்கு பிடிக்கவில்லை, அதனால் எனக்கும் பிடிக்கவில்லை என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வேறு யாரையாவது காதலிக்கிறாயா? என கேட்டனர்.

அதற்கு, நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போதே வேறு ஒரு மாப்பிள்ளையை எனது பெற்றோர் காண்பித்தால் இங்கேயே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து பெற்றோரிடம் செல்ல இளம்பெண்ணை போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர், செல்ல மறுத்துவிட்டார். இதனால் அந்த பெண் வாலாஜாவில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News