நகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
- டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பாலாற்றின் கரையோரம் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்,கடை அருகில் உள்ள காரிய மேடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காரிய மேடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நகராட்சி பகுதியில் நடைபெறும் குடிநீர் குழாய் அமைப்பு பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து முறையாக கருத்தடை செய்ய வேண்டும்.
நகரில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நம்ம டாய்லெட் கழிவறைகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் நகர மன்ற தலைவர்,துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு கடந்து ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், கே.பி.சந்தோஷம், குமார்,நரேஷ், ஜோதி சேதுராமன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.