உள்ளூர் செய்திகள் (District)

சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்: கனிமொழி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்

Published On 2023-05-06 02:32 GMT   |   Update On 2023-05-06 02:32 GMT
  • அண்ணாமலை அவதூறு சட்டத்தை மீறவில்லை.
  • அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளதால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சென்னை :

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் சார்பில் அண்ணாமலைக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு அண்ணாமலை தனித்தனியாக பதில் அனுப்பி வருகிறார்.

இதற்கிடையே கனிமொழி எம்.பி. அனுப்பிய நோட்டீசுக்கு வக்கீல் பால்கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. அண்ணாமலை அவதூறு சட்டத்தை மீறவில்லை.

நீங்கள் (கனிமொழி) அனுப்பிய நோட்டீஸ் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான பலவீனமான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் சேர்த்துள்ள சொத்துகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆவணங்கள் உரிய அமைப்பிடம் உரிய நேரத்தில் அளிக்கப்படும்.

அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளதால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இழப்பீடு எதுவும் தர முடியாது. எந்த நடவடிக்கை என்றாலும் அதனை சட்டப்படி சந்திக்க அண்ணாமலை தயாராக உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News