உள்ளூர் செய்திகள்

நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்-அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை

Published On 2023-05-07 09:51 GMT   |   Update On 2023-05-08 03:29 GMT
  • சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
  • ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும், பேரிடர் மேலாண் ைமத்துறை சார்பில் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்லநிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News