கோவையில் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
- சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது
- கீரணத்தத்தில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் ஈடுபட்டனர்.
சரவணம்பட்டி,
கோவை கீரணத்தம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அங்குள்ள செடிகளுக்கு நீர் உபயோகப்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் 4 மின் மோட்டார்களும் பழுந்தடைந்து விட்டன. இதனால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவு நீரை குடிசை மாற்று வாரியத்தின் பணியாளர்கள் சாலையில் திறந்து விடுகின்றனர்.
இதனால் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் அருகே உள்ள லட்சுமி கார்டன் நகர் வரை இந்த கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் சரவணம்பட்டி-கீரணத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சியும், கீரணத்தம் ஊராட்சியும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் குப்பை கொட்டுவதற்கு கூட குப்பை தொட்டி வைக்காமல் அவர்கள் சாலை ஓரங்களிலேயே குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத் மக்கள் கலைந்து சென்றனர்.