தேனி மாவட்டத்தில் ரூ.6.92 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள்
- ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உத்தமபாளையம் உட்கோட்டப் பகுதிகளில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஓடைப்பட்டி முதல் தென்பழனி வரை ரூ.4 கோடி லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தி தார்சாலை அமைக்கும் பணிகள், மூர்த்திநாயக்கன்பட்டி-ஆனைமலையான்பட்டி சாலையில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை , சின்னமனூர்-சின்ன ஓவுலாபுரம் சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உத்தமபாளையம்-போடேந்திரபுரம் சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகளையும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கம்பம் நகர பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக சாலை மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி-போடிநாயக்கனூர் 4 வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்திப்பு பகுதியினை மேம்படுத்துவதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப்பின் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அவர்களுக்கு வழங்கிய ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், விழா நாட்களிலும், பிற முக்கிய நாட்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகள் நடைபெறுவதை கண்காணித்து தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.