நெல்லை பல்கலைக்கழகத்தில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு
- போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு, சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
- கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் சந்திரசேகர் மற்றும் பதிவாளர் அண்ணாத்துரை வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு, சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வாசுகி வரவேற்றார். ரோட்டரி சங்க பொறுப்பாளர் நாகேந்திரன் சாலையில் பாதுகாப்பாக செல்வது குறித்தும், தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் சாலை விபத்தின் காட்சிகள், விளக்கப்படங்கள் மற்றும் குறியீடுகளை விளக்கிக் கூறினார்.
நயினார் முகம்மது சாலை விபத்தினைக் குறைப்பது பற்றியும், மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து வினா எழுப்பி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்தும் உரையாற்றி வாழ்த்துரை வழங்கினார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வ குமார் விபத்திற்கான காரணங்களையும் அதனைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றியும், சிக்னல்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்தும் உரையாற்றினார்.
நெல்லை டவுன் ரோட்டரி தலைவர் இப்ராகிம் சாலைபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி னார். இக்கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சென்றாயப்பெருமாள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள், பேராசிரியர்கள், திட்ட அலுவலர்கள் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.